Skip to main content

பொருட்பால் - அமைச்சியல் -அங்கவியல்-The Office of Minister of state-Des Ministres- 631-640.


பொருட்பால் - அரசியல் - அமைச்சு-அங்கவியல் - The Office of Minister of state- Des Ministres-631-640.


கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.631

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும் ,ஏற்ற காலத்தையும் ,செய்யும் வகையையும் செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன் .

எனது கருத்து :

இப்பிடியான சிந்தனையள் இப்ப ஒரு அமைச்சருக்கு இருக்கெண்டால் அந்த அமைச்சர் ஒரு வெங்காயம் எண்டுதான் சொல்லுவினம். இப்பத்தையான் அமைச்சருக்கு இருக்கிற மெயின் நோக்கம் சிந்தனையெல்லாம், தான் லெக்சனிலை போட்ட காசை எப்பிடி எடுக்கிறதெண்டும் , எப்பிடி எட்டு தலைமுறைக்கும் சொத்துபத்து சேக்கிறதெண்டிலையும் தான் கண்டியளோ .

A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge.

Celui-là est ministre qui est capable de bien discerner les moyens, l'opportunité et la manière de mener une entreprise et de s'acquitter de ces délicates fonctions.

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு 
ஐந்துடன் மாண்டது அமைச்சு.632

அஞ்சாமையும் ,குடிப்பிறப்பும்,காக்கும் திறனும்,கற்றுணர்ந்த அறிவும் ,முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் உடையவனே அமைச்சன் .

எனது கருத்து :

இந்தக் காலத்திலை ஆர் ஐயா இப்படியான அமைச்சர் இருக்கினம் ? தங்களுக்கு வேண்டப்பட்ட குடிகளை பதுக்காக்கிறதிலையும், அவையளுக்கு துணிவாய் வேலை செய்யிறதிலையும் தான் இப்பத்தையான் பெரும்பாலான அமைச்சர்மாரின்ரை பொழுதுகள் போகுது. மற்ற குடிகள் எல்லாம் இவைக்கு தேவை இல்லாத குடிகள். ஆனால் இவை தரவளி லெக்சன் நேரத்திலை மட்டும் காலுக்கை விழுந்து கிடப்பினம். 

A minister must greatness own of guardian power, determined mind,Learn'd wisdom, manly effort with the former five combined.

Voici les cinq qualités nécessaires à un ministre : l'énergie dans l'action, la protection des sujets, l'étude du Droit, la connaissance du licet et du non licet, l'effort.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்லது அமைச்சு.633

பகைவரோடு சேர்ந்துள்ளோரைப் பிரித்தலிலும் ,தம்மைப் பிரிந்து போகாமல் காத்தலிலும் ,பிரிந்து போனோரை முயன்று மீண்டும் செர்த்தளிலும் வல்லவன் அமைச்சன்.

எனது கருத்து :

எனக்கொரு ஐமிச்சம் ஐயா .பகைவரோடை சேர்ந்து இருக்கிறவையை பிரிக்கிறது மொள்ளமாரி வேலை இல்லையோ ? இதைத்தானே ஊரிலை இருக்கிற அமைச்சர்மார் கொஞ்சப்பேர் செய்து எங்களை கந்தறுந்து போகச்செய்தினம்.

A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

Est ministre, celui qui est habile à faire naître la scission parmi les alliés de l'ennemi, à conserver l'union parmi ses alliés (au moyen des dons et des paroles agréables) et à pardonner à ceux qui se sont séparés de lui.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு. 634

செய்யத்தக்க செயலை ஆராய்தலிலும் ,அதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செய்தலிலும் ,துணிவாகக் கருத்தைச் சொல்லுதலிலும் வல்லவன் அமைச்சன். 

எனது கருத்து :

உது இப்ப செல்லாது ஐயா .காசு எந்தப்பக்கம் இருக்குதோ அந்தப்பக்கம் தான் அமைச்சரின்ரை ஞாயப்பிளப்பும் இருக்கும். இதை எங்கடை பரம்பரையிலேயே கண்டு போட்டம்.

A minister has power to see the methods help afford,To ponder long, then utter calm conclusive word.

Est ministre, celui qui a l'habileté de faire un choix parmi les moyens d'agir en connaissance de cause, et de prononcer les paroles qui engagent à le croire.

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் 
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.635

நீதி நெறிகளைத் தெரிந்து ,பொருள் நிறைந்த சொல்லை உடையவனாய் ,எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய் உள்ளவனே அரசனுக்கு துணையாவான். 

எனது கருத்து :

இப்பவெல்லாம் அமைச்சர்மாருக்கு இருக்கிற ஒரே பிரச்சனை என்னவெண்டால், அரசனுக்கு எப்பிடி எப்பிடி செம்பு தூக்கலாம் அதாலை தன்ரை பதவியை எப்பிடி வைச்சிருக்கலாம் எண்ட யோசினையாலை இந்த அமைச்சர்மாருகளுக்கு ஒழுங்கான நித்திரை தண்ணிவென்னி இல்லைப் பாருங்கோ .

The man who virtue knows, has use of wise and pleasant words.With plans for every season apt, in counsel aid affords.

Est conseiller qualifié (du Roi), celui qui connaît les actes vertueux pratiqués (par le Roi), qui a des paroles pleines de savoir et qui connaît les moyens d'agir propres à chaque temps.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் 
யாவுள முன்நிற் பவை.636

இயல்பான நுண்ணறிவும் ,நூல் அறிவும் ஒருங்கே உடையவர்க்கு எதிராக எந்த நுட்பமான சூழ்நிலைகளும் நிற்கமுடியாமல் போகும் .

எனது கருத்து :

எந்த தொடக்கத்துக்கும் ஒரு முடிவெண்டு ஒண்டு இருக்கு .அதுதான் காலம் .இந்தக் காலத்துக்கு முன்னாலை எந்தக் கொம்பனாலையும் நிண்டு பிடிக்கேலாது எண்டதையும் நாங்கள் கண்ணாலை பாத்திட்டம். 

When native subtilty combines with sound scholastic lore,'Tis subtilty surpassing all, which nothing stands before.

Quels sont donc les problèmes très délicats à résoudre, pour celui qui joint la connaissance des livres à une intelligence naturelle ?

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து 
இயற்கை அறிந்து செயல்.637

நூலறிவால் செயல்களைச் செய்ய அறிந்த போதிலும் உலகத்தின் நடைமுறைகளையும் அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும் .

எனது கருத்து :

இங்கைதான் நீங்கள் நிக்கிறியள். எல்லாருக்கும் தண்ணி காட்டினம், அதாலை எங்களுக்கு மிதப்பு வந்திது. கடைசியிலை நந்திக்கடலோடை எங்கடை முப்பது வரியத்து கதை முடிஞ்சுது .

Though knowing all that books can teach, 'tis truest tact,To follow common sense of men in act.

Quoique l'on soit consommé dans la connaissance des livres, il faut savoir ce qui se passe dans le monde et y conformer ses actes.

அறிகுஒன்று அறியான் எனினும் உறுதி 
உழைஇருந்தான் கூறல் கடன்.638

அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல் ,தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும் ,அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக் கூறுதல் கடமையாகும் .

எனது கருத்து :

ஐயா........... அரசன் கொடுங்கோலானாய் இருந்து அமைச்சர்மாரை போட்டுத்தள்ளினால் எந்த அமைச்சர்அந்த அரசனுக்கு இடிச்சு சொல்லுவான் ?? எல்லா அமைச்சரும் உயிருக்கு பயந்து அரசனுக்கு செம்பு தூக்கத்தான் செய்வாங்கள். 

'Tis duty of the man in place aloud to say,The very truth, though unwise king may cast his words away.

Bien que (le Roi) traverse les consesils des connaisseurs et soit lui-même inintelligent, le devoir du ministre est de lui donner toujours et sans se lasser de bons conseils.

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துஉள் தெவ்வோர் 
எழுபது கோடி உறும்.639

அருகில் இருந்தவாறே அரசனுக்கு தீங்கு நினைக்கும் அமைச்சனை விட ,எழுபது கோடி பகைவர் இருந்தாலும் பாதகமில்லை .

எனது கருத்து :

அமைச்சர்மார் எல்லாரும் அரசியலிலை வியாபாரத்துக்கு எண்டுதான் வாறாங்கள். இதிலை நாட்டுநலம் எண்டது அவனவன் அதிலை எவ்வளவு அள்ளலாம் எண்டதை பொறுத்துத்தான் இருக்கு. பதவியிலை இருக்கும் வரைக்கும் வறுகுமட்டும் வறுகிக்கொண்டு அடுத்தமுறை தோத்தால் வறுகினது அமைச்சருக்கு கை குடுக்கும். இதிலை பகைவர் எண்டதெல்லாம் காசாலைதான் முடிவு செய்யிறது இப்பத்தையான் நடைமுறை. 

A minister who by king's side plots evil things,Worse woes than countless foemen brings.

Il y a sept cent millions d'ennemis dans la personne du ministre qui est près du Roi et qui médite à lui faire du tort.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் 
திறப்பாடு இலாஅ தவர்.640

முறையாக ஆராய்ந்து அறிந்த போதிலும் செயல் திறமை இல்லாத அமைச்சர்கள் முடிவில்லாத செயல்களையே செய்வர்.

எனது கருத்து :

அரசனுக்கு செம்பு தூக்கிற அமைச்சர்கள் இப்ப அரசவையிலை கூடினதாலை, அரசன் எப்பவுமே ஆரும் ஒருத்ததரும் தன்னை ஒண்டும் செய்யேலாது எண்ட போதையிலை தான் இருப்பான். கடைசியிலை லெக்சன் எண்ட ஒண்டு வரேக்கைதான் அரசனுக்கு இந்த அமைச்சர்மாரும் குடிமக்களும் ஒண்டாய் சேந்து ஆப்படிச்சு போதையை இறக்குவாங்கள்.

For gain of end desired just counsel nought avails,To minister, when tact in execution fails.

Les Ministres qui n'on pas l'énergis de parachever leurs œuvres, les laisseront inachevées bien qu'elles aient été mûrement étudiées.


Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…