பொருட்பால்-அரசியல்-தெரிந்துவினையாடல்- Selection and Employment-Selection d’employes- 511 -520.


பொருட்பால்-அரசியல்-தெரிந்துவினையாடல்-Selection and Employment Selection-d’employes-511-520.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 511

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து , நல்லதைச் செய்யும் தன்மை உடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் .

எனது கருத்து :

இந்தக்காலத்திலை ஒருத்தரிட்டையும் நூறுவீதம் நம்பி அலுவலைக் குடுக்கேலாது கண்டியளோ . எப்ப எங்கை அலுவலைக் குடுத்த உங்களுக்கே ஆப்படிப்பங்கள் எண்டு தெரியாது . எப்பவும் ஒரு மூண்டவது கண் அலுவலைக் குடுத்தவையிட்டை வைக்கவேணும் எண்டிறது இந்தக்காலம் ஐயன் . இதை நாங்கள் எங்கடை தேசியவிடுதலைப் போராட்டத்திலை கண்டு தெளிஞ்சிட்டம் .

Who good and evil scanning, ever makes the good his joy; Such man of virtuous mood should king employ.

N'employer à son service que celui qui (dans un cas déterminé) a pesé le pour et le contre et qui a eu le bon esprit de s'arrêter au moyen susceptible d'assurer !e succès.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.512

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து , அவற்றால் வளத்தை ஏற்ப்படுத்தி , மேற்கொண்டு இடையூறுகளை நீக்க வல்லவனே செயலைச் செய்வானாக.

எனது கருத்து :

ஊரிலை பெரிசுகள் சொல்லுவினம் , " முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமெண்டு " . ஒருதன் எப்பிடி வேலை செய்யவேணுமெண்டால் , வருவாயை பெருக்குறதோடை இல்லாமல் அதிலை வாற பிரச்சனையளையும் வெட்டியாடிற தில் உள்ளவனாய் இருக்கவேணும் . இப்ப வேலைக்குவாறவை தாங்கள் படிச்ச படிப்புகளை கிளிப்பிள்ளைமாதிரி சொல்லி , அனுபவப்பட்டவங்கள் சொல்லுறதை கேக்கிற நிலமையள் இந்தக்காலத்திலை குறைஞ்சு போச்சு பாருங்கோ .

Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand

Que celui qui a la capacité d'élargir les moyens des revenus, d'augmenter ainsi la prospérité (du Royaume), de découvrir et d'annihiler les obstacles qui l'empêchent serve (le Roi).

அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குஉடையான் கட்டே தெளிவு.513

அன்பு , அறிவு , ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு , அவா இல்லாமை ஆகிய இந்நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனை , செயல்களை ஆற்றுமாறு தெளியலாம் .

எனது கருத்து :

ஐயன் நல்ல விசயத்தைத் தான் சொல்லியிருக்கிறியள் . ஆனால் பாருங்கோ , இந்த பதவி நாற்காலி எண்டது எந்த ஒரு நல்லவனையும் ஒரு ஆட்டு ஆட்டித்தான் விடும் . எல்லாரும் பதவிக்கு வரும் வரைக்கும்தான் பம்முவினம் பேந்து அவையின்ரை கால் நிலத்திலை இருக்காது . மிதப்பாய்த்தான் திரிவினம் . எத்தினை அரசியல்வாதியளையும் , பெரிய பதவியளிலை இருக்கிறவையையும் நாங்களும் நாளந்தம் பாக்கிறம்தானே !!

A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be.

Il est intelligent de ne choisir à son service que celui qui possède d'une manière parfaite les quatre qualités que voici: l'affection, l'intelligence, la décision et l'absence de cupidité.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர். 514

எல்லா வகையாலும் தெளிந்த பிறகும் அவ் வினையின் இயல்பால் வேறுபடும் மாந்தர் உலகில் பலராவர் .

எனது கருத்து :

ஆரோ உங்களுக்கும் ஆப்படிச்சுபோட்டான் போலை கிடக்கு . இப்பிடி நொந்துபோய் சொல்லுறியளே ஐயன் ?? உங்கடை காலத்திலையும் இப்பிடியான ஆக்கள் இருந்திருக்கிறாங்கள் எண்டதை ஒத்துக்கொள்ளுறியள்தானே ஐயன் ??

Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action tried!

Nombreux sont ceux qui. après avoir satisfait à toutes les épreuves, après avoir été chosis pour servir, changent de caractère dans l'exercice de leurs fonctions.

அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. 515

செய்யும் செயலை நன்கு அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்பவனைத் தவிர இவன் அன்பிற் சிறந்தவன் என்று யாரும் வேலை தரக்கூடாது.

எனது கருத்து :

உங்கடை கருத்திலை நான் உடன்பட்டாலும் , கூலிக்கு மாரடிக்கிறவையிட்டை எப்பிடி நாங்கள் உண்மையான விசுவாசத்தை எதிர்பார்க்கேலும் ???

No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient care.

Ne peut être employé que celui qui connaît les devoirs de sa charge et s'efforce de s'en acquitter avec patience et non celui qui a seulement de l'affection (pour l'employeur).

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 516 

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து செய்யும் செயலையும் ஆராய்ந்து தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து அவனிடம் ஒப்புவிக் வேண்டும்.

எனது கருத்து :

இதைத்தான் "பெரிசுகள்சொல்லுறவை காலம் , இடம் , பொருள் , ஏவல் பாத்து ஒரு அலுவலை செய்யவேணும்" எண்டு . ஆனால் இப்பிடியெல்லாம் யோசிச்சு வலு கிளியறாய் கிட்டமுட்ட 2 சந்ததியிளை துலைச்ச எங்கடை போராட்டம் ஏன் ஐயன் தோத்தது ???

Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed.

D'abord examiner la capacité de l'homme et la nature du service, puis choisir le moment propice à l'employer; enfin charger l'homme ainsi éprouvé, du service.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 517

' இந்தத் தொழிலை இக்காரணங்களால் இவன் முடிப்பான் ' என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் .

எனது கருத்து :

என்னதான் ஒருத்தர் ஆள் பொருள் படையணியளோடை ஒரு வேலையிலை இறங்கினாலும் அந்தவேலை நடைமுறை யதார்த்தோடை ஒத்து ஓடுதா எண்டும் பாக்கவேணும் . அப்பிடி ஒத்து ஓடாத எந்த வேலையும் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை .

'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand;

Se convaincre d'abord qu'un tel a l'aptitude de remplir telle charge, par tel moyen approprié ; lui confier ensuite la responsabilité de la charge.

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரியன் ஆகச் செயல். 518

இவன் இந்த வேலைக்குத் தகுந்தவன் என்று ஆராய்ந்து கண்டபிறகே அவனை அத்தொழிலுக்கு உரியவனகச் செய்யவேண்டும் .

எனது கருத்து :

இது எங்கை ஐயன் நடக்குது ?? கன இடங்களிலை பொம்மையள்தான் பதவியிலை இருக்கு . ஒருத்தரும் தன்ரை பதவியின்ரை அதிகாரத்தை செய்யுறதுக்கு அரசியலும் காசுமல்லோ குறுக்காலை நிக்கிது !!!! 

As each man's special aptitude is known, Bid each man make that special work his own.

Jugez-vous, après examen, qu'un tel a les aptitudes à remplir telle charge, n'hésitez pas à le promouvoir à cet emploi.

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு. 519

எப்போதும் தன் தொழில் முயற்சி உடையவரது நட்பினைப் பாராட்டாமல் வேறாக நினைப்பவனிடமிருந்து செல்வம் நீங்கும் .

எனது கருத்து :

இதுதானே எல்லா இடத்திலையும் நடக்குது !!! இதை நாங்கள் " நண்டு குணம் " எண்டும் சொல்லுவம் . ஒருத்தன் தன்ரை வேலையை சரியா செய்தால் , ஒண்டில் அவனை " துரோகி " எண்டு சொல்லுவம் அல்லது " ஒட்டுக்குழு " எண்டும் சொல்லுவம் .

Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share.

La Fille de Dieu (déesse de la Fortune) se sépare du Roi qui suspecte la conduite irréprochable de celui qui s'efforce de bien faire son service.

நாடோறும் நாடுக மன்னன் ; வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. 520

தொழில் செய்கின்றவன் தன் கடமையைச் சரிவரச் செய்வானாயின் உலகம் கெடாது .ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனைக் கவனித்து வரவேண்டும் .

எனது கருத்து :

அதாவது " அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி " எண்டு சொல்லிறியள் . ஆனால் பாருங்கோ பதவியிலை இருக்கிறவை பிழையளை விட்டுக்கொண்டு , கீழை இருக்கிறவை ஒழுங்குமுறையாய் இருக்கவேணும் எண்டு நினைக்கிறதுதான் இப்ப உள்ள நடைமுறை பாருங்கோ .

Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way.

Si le fonctionnaire ne dévie pas de ses devoirs, le monde ne déviera pas de sa marche normale. Que le Roi surveille tous les jours et étroitement le fonctionnaire!








Comments